12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், மொகாலியில் நடைபெறவுள்ள இந்தத் தொடரின் 32ஆவது போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி நான்கு வெற்றி, நான்கு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணி இறுதியாக மும்பை அணியிடம் வெற்றிபெற்றது. இதனால், அந்த அணி இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் அடையவே விரும்பும்.
அதேசமயம், பஞ்சாப் அணி தொடர்ச்சியாக மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே தோல்விகளை சந்தித்துள்ளதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடும்.
மும்பை அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் 89 ரன்களை அடித்ததன் மூலம் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். இதனால், இந்தத் தொடரில் தன்னை மன்கட் முறையில் அவுட் செய்த அஷ்வினுக்கு இவர் பேட்டிங்கில் பதிலடி கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
மன்கட் முறையைப் போல் அஷ்வின் வேறெதாவது முறையைப் பயன்படுத்தி மீண்டும் பஞ்சாப் அணியை வெற்றிபெறச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், இன்றையப் போட்டியில் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று 8 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.