2019 ஆம் ஆண்டுக்கான ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்து வருகின்றன. இந்தப் போட்டியின் மூலம் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நான்கு ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால், கெயிலுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நிதனமாக உயர்த்தினார்.
இதனிடையே, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் கிறிஸ் கெயில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4000 ரன்களை குவித்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைல்கள்ளை அவர் 112ஆவது போட்டியில் கடந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 4000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதைத்தொடர்ந்து, 24 பந்துகளில் 22 ரன்களை விளாசிய அவர், கவுதமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
25 பந்துகளில் 27 ரன்கள் என்று நிதனமாக ஆடிய கெயில், பின் தனது விஸ்வரூபமான பேட்டிங்கை வெளிபடுத்தத் தொடங்கினார். குறிப்பாக உனாத்கட் வீசிய 12வது ஓவரில், கெயில் தொடர்ந்து மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களை சேர்த்தார். இதனிடையே களத்தில் இருந்த, சர்ஃப்ராஸ் கானும் தன்பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.
இதைத்தொடர்ந்து ஸ்டோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரிலும், கெயில் பவுண்ட்ரி மழை பொழிந்தார். 6,4,4 என மிரட்டி எடுத்த அவர் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில்ஆட்டமிழந்தார். ஃபிளாட் ஷாட்டாக அடித்த அவரது பந்தை மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்திருந்த ராகுல் திருபாதி மிக அருமையாக பிடித்தார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு சரிந்தது.
அவரைத் தொடர்ந்து வந்த அறிமுக வீரர் நிகோலஸ் பூரான் ஸ்டோக்ஸ் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் அந்த ஓவரின் கடைசி பந்தை சர்ஃப்ராஸ் கான் சிக்சர் அடித்ததால் பஞ்சாப் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 72, சர்ஃப்ராஸ் கான் 46 ரன்களை எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு, தவால் குல்கர்னி மற்றும் கவுதம் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.