12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதைத்தொடர்ந்து, டெல்லி ஃபெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்துவருகின்றன.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எந்தவித தயக்கமுமின்றி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்விஷா, ஷிகர் தவான் முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த நிலையில், பிரித்விஷா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களில் தாஹிர் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த்-திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடக்கத்தில் இருந்தே ரிஷப் பந்த் அதிரடியாக ஆடினார். பிராவோ ஓவரில் ஒரு பவுண்டரி, ஹர்பஜன் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என மிரட்டிய அவரை சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ வெளியேற்றினார்.
ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் ரிஷப் பந்த் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்த பந்தை ஷர்துல் தாக்குர் சிறப்பாக பிடித்தார். இதனால், இன்றையப் போட்டியிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களை ரிஷப் பந்த் 24 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.
பின்னர் வந்த இங்கிரம் பிராவோவின் பந்துவீச்சிலும், அவரைத் தொடர்ந்து வந்த கீமியோ பவுல் ஜடேஜாவின் ஓவரிலும் அவுட் ஆகியதால், டெல்லி அணியின் ஸ்கோர் கிடுகிடுவென குறைந்தது.
இதனிடையே, பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசிய தொடக்க வீரர் ஷிகர் தவானும், பிராவோவின் ஸ்லோயர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனது முதல் ஓவரில் 17 ரன்களை அள்ளித்தந்த பிராவோ, பின் தனது வழக்கமான ஸ்லோயர் பந்துகளை பயன்படுத்தினார்.
குறிப்பாக, ஆறு பந்துகளில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தது.
ரிஷப் பந்த் அவுட் ஆகும்போது 120 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த டெல்லிஅணி, பின் ஏழு ரன்களை மட்டும் சேர்த்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது, அந்த அணியின் மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மில் இருப்பதை வெளிக்காட்டியுள்ளது. சென்னை அணி தரப்பில் பிராவோ மூன்று- தாஹிர், ஜடேஜா, தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.