சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் சென்னை அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்களாகவும், டெல்லி அணியில் இளம் வீரர்களாகவும் இருப்பதைபார்த்தபின், சென்னை அணி வீரர்களின் வயது குறித்த பேச்சு மீண்டும் அடிபடத் தொடங்கியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிராவோவிடம் இதுகுறித்து கேட்டபோது, "சென்னை அணி வீரர்களுக்கு ஒன்றும் 60 வயது ஆகிவிடவில்லை. வயது ஒரு பொருட்டே அல்ல. சென்னை அணி வீரர்கள் முழு உடற்தகுதியுடன் விளையாடுகிறோம்.
30, 32, 35 என முப்பது வயதிற்கும் மேற்பட்ட வீரர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், வயது ஒருபோதும் அவர்களின் ஆட்டத்திறனைப் பாதிக்கவில்லை.
நாங்கள் ஃபீல்டிங்கில் சிறந்த அணி அல்ல. ஆனால், எங்களின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து விளையாடுகிறோம். உலகின் சிறந்த கேப்டனால் வழிநடத்தப்படுகிறோம். சென்னை அணிக்கென்று டீம் மீட்டிங் கிடையாது. பயிற்சியில் ஈடுபட்டபின் நேரடியாக போட்டியில் களமிறங்குகிறோம்.
தோனி அடிக்கடி ஒன்றை கூறுவார். அது என்னவென்றால், நாம் ஃபீல்டிங்கில் சிறந்த அணி அல்ல. ஆனால், நாம் ஸ்மார்ட் அணியாக விளையாடலாம் என்பதுதான். ஒவ்வொரு போட்டியிலும் வெல்வதற்கு எங்கள் அனுபவம் எங்களுக்கு கைக்கொடுக்கிறது" என பதிலளித்தார்.