ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணியிடம் கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்த சென்னை அணி நூழிலையில் கோப்பையை நழுவவிட்டது. இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் போட்டி முடிந்தபின் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் போட்டி வர்ணணையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தோனி கூறியதாவது,
ஒரு அணியாக எங்களுக்கு இது ஒரு சிறந்த சீசன் என்று தான் கூற வேண்டும். ஆனால் நாங்கள் இம்முறை பைனல் வரை வந்தது எவ்வாறு என்பதை திரும்பி பார்த்தால், மற்ற சீசன்களைக் காட்டிலும் இம்முறை தடுமாறியே பைனலில் நுழைந்தோம். இதுபோன்ற பிட்சில் எங்கள் பவுலர்கள் 150க்கும் குறைவான ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தியும், நாங்கள் மிடில் ஆர்டரில் சரியாக விளையாடதே தோல்விக்கு காரணமாக அமைந்தது, என்றார்.
அதைத் தொடர்ந்து வர்ணணையாளர் சைமன் டவுல், அடுத்த போட்டியில் நீங்கள் விளையாடுவீர்களா என கேள்வியெழுப்பினார். அதற்கு தோனி, கண்டிப்பாக விளையாடுவேன் எனக் கூறினார். இதையடுத்து மீண்டும் ஒருமுறை சஞ்சய் மஞ்ரேக்கரும் அதே கேள்வியை கேட்க, இம்முறை தோனி, இப்போது அது பத்தி பேச முடியாது. அடுத்து உலகக்கோப்பை வர உள்ளதால் அதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உலகக்கோப்பை முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
தோனி வரும் உலகக்கோப்பையுடன் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறி அனைவரும் கூறும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பேன் என்று தோனியின் பதில் கூறியது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் தோனி 15 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் குவித்து சென்னை அணியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.