12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 55ஆவது லீக் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், டு பிளசிஸ்- ரெய்னா இணை, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்களை சேர்த்த நிலையில், ரெய்னா 53 ரன்களுக்கு அவுட் ஆனார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய டு பிளசிஸ் 55 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அவரைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் ராயுடு (1), கேதர் ஜாதவ் (0) சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். தோனி 10 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனால், சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் மூன்று, முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.