இன்றைய ஐபிஎல் போட்டியின் 34ஆவது லீக் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா - டி காக் இணை டெல்லி அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, மோரிஸ் வீசிய நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இந்த இணை பவர்-பிளே முடிவில் 57 ரன்களை எடுத்து சிறப்பாகத் தொடக்கத்தைக் கொடுத்தது.
தொடர்ந்து அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ரோஹித் ஷர்மா போல்டாகி 30 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த களமிறங்கிய பென் கட்டிங் இரண்டு ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் ரன் ரேட் குறைந்தது.
இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் - டி காக் இணை டெல்லி அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரர் டி காக் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி 35 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் - குருணால் பாண்டியா இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை டெல்லி அணியின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டு மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்திருந்தது. இதனியடுத்து அதிரடிக்கு மாறிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் டெல்லி அணியின் கை ஓங்கியது.
இதனையடுத்து மும்பை அணியின் பாண்டியா சகோதரர்கள் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை டெல்லி அணியின் அபாரமான பந்துவீச்சால் ரன்கள் எடுக்க திணறியது. 17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து கீமோ பவுல் வீசிய 18ஆவது ஓவரில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் பறக்கவிட்டு அந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 19ஆவது ஓவரை கிறிச் மோரிச் வீச, அதில் அதிரடியாக 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து 19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 150 ரன்களை எடுத்தது.
கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 18 ரன்கல் சேர்த்தது. இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில்ச் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய குருணால் பாண்டியா 37 ரன்கள் எடுத்தார்.