இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் முன்னாள் வீரர்கள், முன்னணி வர்ணனையாளர்கள் என ஏராளமானோர் என தொடரை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான பிரையன் லாரா இணைந்துள்ளார். டெல்லி - பெங்களூரு, ராஜஸ்தான் - கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் இவர், டீன் ஜோன்ஸ், பிரட் லீ, ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோருடன் சேர்ந்து வர்ணணையாளராக ஈடுபட்டார். தனது ஸ்டைலான பேட்டிங் மூலம், ரசிகர்களை கவர்ந்த லாரா தற்போது வர்ணனையாளராக புது அவதாரம் எடுத்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.