ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான மும்பை அணியின் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் 12 ரன்களை மட்டுமே வழங்கி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்த ரன்களை வழங்கிய அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் வீரர் சோஹைல் தன்வீரின் 11 ஆண்டு சாதனையை இவர் முறியடித்துள்ளார். 2008இல் சென்னை அணிக்கு எதிராக சோஹைல் தன்வீர் 14 ரன்களை தந்து ஆறு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
அத்துடன் அல்ஸாரி ஜோசப், ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். குறைந்த வயதில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பும்ராவின் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வதென்று யோசித்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணிக்கு இவரது பந்துவீச்சு, வினாத்தாளில் இருந்து வெளியே கேட்கப்பட்ட கேள்விப்போல் இருந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் குறைந்த ரன்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியல்:
- அல்ஸாரி ஜோசப் (மும்பை ) - 6/12, ஹைதராபாத் அணிக்கு எதிராக (2019)
- சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) - 6/14, சென்னை அணிக்கு எதிராக (2008)
- ஆடம் சாம்பா (புனே) - 6/19, ஹைதராபாத் அணிக்கு எதிராக (2016)
ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வீரர்கள்:
- அல்ஸாரி ஜோசப் (மும்பை ) - 6/12, ஹைதராபாத் அணிக்கு எதிராக (2019)
- ஆன்ட்ரூவ் டை (பஞ்சாப்) - 5/17, புனே அணிக்கு எதிராக (2017)
- சோயிப் அக்தர் (கொல்கத்தா) - 4/11, டெல்லி அணிக்கு எதிராக (2008)
குறைந்த வயதில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:
- 21 வயது 204 நாட்கள் உனாத்கட் ( பெங்களூரு) - டெல்லி அணிக்கு எதிராக
- 22 வயது 137 நாட்கள் அல்ஸாரி ஜோசப் (மும்பை)- ஹைதராபாத் அணிக்கு எதிராக
- 22வயது 237 நாட்கள் இஷாந்த் ஷர்மா (டெல்லி) - கொச்சி அணிக்கு எதிராக