சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்ட்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி வீரர்கள் வில்லியம்சன், டெய்லர் தொடங்கினர். மழை காரணமாக இன்றைய ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
ஷமி வேட்டை ஆரம்பம்
வில்லியம்சனும் டெய்லரும் அணியின் ஸ்கோரை மிதமாக ஏற்றிக் கொண்டிருந்தனர். இன்றைய ஆட்டத்தின் முதல் பதிமூன்று ஓவர்களில் நியூசிலாந்து அணி 16 ரன்களே எடுத்தது.
அடுத்த ஓவரை வீசிய முகமது ஷமி, ராஸ் டெய்லரின் விக்கெட்டை எடுத்துக்கொடுத்து இந்திய அணியின் நம்பிக்கையை மீட்டெடுத்தார். ராஸ் டெய்லர் 11 (37) ரன்களுக்கு கில்லிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் சிறிதுநேரம் தாக்குப்பிடித்த நிக்கோலஸ் 7 (23), இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன்பின், களமிறங்கிய பிஜே வாட்லிங் 1 (3) ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங்கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்படி, இன்றைய ஆட்டத்தின் மதிய இடைவேளைக்கு முன்வரை, நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்திருந்தது.
உணவுக்குப் பின் ஷமியின் விருந்து
உணவு இடைவேளைக்குப் பிறகு, காலின் டி கிராண்ட்ஹோம் 9 (22) ரன்களுடனும், வில்லியம்சன் 23 (125) ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இன்று ஷமி காட்டில்தான் மழை என்று கூறலாம், கிராண்ட்ஹோமை 13 (30) ரன்களிலும், திடீர் அதிரடியை காட்டிவந்த ஜேமீசனை 21 (16) ரன்களிலும் விக்கெட் எடுத்து இந்தியாவின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பியுள்ளார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை எடுத்துள்ளது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் உள்ள நிலையில், நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: WTC FINAL: மழைக்கு பலியான நான்காம் நாள் ஆட்டம்; கைவிட்டுப்போகுமா கோப்பை?