லண்டன் (இங்கிலாந்து): இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 12) தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 129 ரன்களை எடுத்திருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் (ஆக. 13) முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 119 ரன்களை சேர்த்தது.மூன்றாம் நாளான நேற்று தேநீர் இடைவேளைக்கு முன்னர்வரை, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்களை எடுத்திருந்தது.
மூன்றாம் நாள்... மூன்றாம் செஷன்...
தேநீர் இடைவேளைக்கு பின்னர், ஜோ ரூட் 132 ரன்களுடனும், மொயின் அலி 20 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆடுகளத்தில் ஆணி அடித்து நின்றுவிட்ட ஜோ ரூட்டை, இந்திய பந்துவீச்சாளர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவரும் அசால்டாக 150 ரன்களை கடந்து, இரட்டைச் சதத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்.
அதனால், வழக்கம்போல் மறுமுனையில் இருக்கும் பின்வரிசை வீரர்களிடம் இந்திய பந்துவீச்சாளர்கள் மோத தொடங்கிவிட்டனர். இடதுகை பேட்ஸ்மேன்களான மொயின் அலியை 27 ரன்களுக்கும், சாம் கரனை ரன் ஏதுமின்றியும் பெவிலியன் அனுப்பி வைத்தார் இஷாந்த் சர்மா. அடுத்து வந்த ராபின்சனும் 6 ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தார்
மிஸ்ஸான ஐந்தாவது விக்கெட்
இப்போட்டியில், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சிராஜ் ஐந்தாவது விக்கெட் எடுத்தால் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் பெயரை பதித்துவிடலாம் என்ற எண்ணத்திலோ என்னவோ, முன்பைவிட இப்போது துல்லியமாக ஸ்டம்புகளை நோக்கி வீசத் தொடங்கினார்.
அப்போது, ஒரு குட்-லெந்த் பந்தை காலில் வாங்கினார் ரூட். அதற்கு அவுட் கொடுக்கப்படாததால், கோலி கடைசி ரிவ்யூ வாய்ப்பை பயன்படுத்தினார்.
ரிவ்யூவும் 'அம்பயர்ஸ் கால்' முடிவை தெரிவிக்க, சிராஜைவிட கோலி மிகவும் ஏமாற்றமடைந்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
பும்ராவும் நோ-பால்களும்
பும்ரா இன்றும் பல நோ-பால்களை வீசினார். குறிப்பாக, ஒரு ஓவரில் இரண்டு நோ-பால்களை வீசி ஏமாற்றமளித்தார். பும்ரா இதுவரை இந்த தொடரில் மட்டும் நோ-பால்கள் மூலம் 22 ரன்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், மார்க் வுட் ரன்-அவுட்டாகி வெளியேற, ரூட் 170 ரன்களுடன் களத்தில் நின்றுகொண்டிருந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆண்டர்சன், ரூட் இரட்டை சதம் அடிக்கும்வரை ஆட்டமிழக்கக் கூடாது என்ற முடிவோடுதான் ஆடினார். ரன் ஏதும் எடுக்காமல் 14 பந்துகளை தாக்குப்பிடித்த ஆண்டர்சன், அடுத்த பந்தில் ஷமியிடம் போல்டாகி வெளியேற இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதன்மூலம், மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 391 ரன்களை குவித்து, இந்திய அணியைவிட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
மும்மூர்த்திகள் மீள வேண்டும்
இங்கிலாந்து அணியின் நான்காவது வீரராக களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் ஏறத்தாழ 53 ஓவர்களில் (321 பந்துகள்) 18 பவுண்டரிகள் உள்பட 180 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில், சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கவுள்ள நிலையில், ரூட்டை போன்று இந்திய பேட்ஸ்மேன் யாரெனும் நிலைத்து நின்று ஆடினால்தான் வெற்றியைக் குறித்து யோசிக்கவே முடியும். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவரும் கோலி, புஜாரா, ராஹானே ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் செஷன் வாரியாக...
முதல் செஷன்: இங்கிலாந்து அணி - 28 ஓவர்கள் - 97/0
இரண்டாவது செஷன்: இங்கிலாந்து அணி - 25 ஓவர்கள் - 98/2
மூன்றாவது செஷன்: இங்கிலாந்து அணி - 30 ஓவர்கள் - 77/5
இதையும் படிங்க: ENG vs IND LORDS TEST: முன்னிலையை நோக்கி இங்கிலாந்து; மிரட்டும் ரூட்