ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவிற்கு கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. ஏனென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ரிஷப் பந்த பங்கேற்று, ஒரு சதமும் அடித்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
விக்கெட் கீப்பிங் செய்யும்போது ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் செய்வதுபோலவே ரிஷப் பந்தும் எதிரணி வீரர்களைக் கிண்டல்செய்கிறார். எனவே இந்த முறையும் ரிஷப் பந்திற்கு இந்தியா அணியின் தேர்வுக்குழு விளையாட வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில், இளம் வீரர் ரிஷப் பந்த் 73 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் பிங்க் பந்து கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சமீபகாலமாக நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் வருகின்றனர். அணியின் பேட்டிங் வரிசையைக் கருத்தில்கொண்டு, ரிஷப் பந்திற்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். எனவே கீப்பிங் செய்பவர்கள் ஸ்டம்பிலிருந்து 15 அடி தூரத்தில்தான் நிற்பார்கள். அதனால் பந்தைப் பிடிப்பதற்குப் போதுமான நேரம் கிடைக்கும்.
ஆதனால், விர்திமான் சஹாவின் கீப்பிங்கைவிட பேட்டிங்கை கருத்தில்கொண்டு, இளம் வீரர் ரிஷப் பந்திற்கு அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்து வாய்ப்பு வழங்க வேண்டும்.
எவ்வாறாயினும், முதல் டெஸ்டில் ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்டு இந்திய அணி களம் இறங்குவது மிகவும் கடினம். ஏனெனில் ரவீந்திர ஜடேஜாவின் உடல்நிலை பிரச்சினை காரணமாக அவர் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.
ஜடேஜா, அணியில் இடம்பெற்றால், அவர் ஐந்தாவது பந்து வீச்சாளராகவும், பேட்டிங்கையும் பலப்படுத்துவார். அவர் இல்லாத நிலையில், இந்தியா அணி ஆறு பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர், நான்கு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'லயனின் பந்துவீச்சை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்' - இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை