மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் நேற்று (நவ.02) இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது.
போட்டியின் முடிவுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி குறித்துக் கூறியதாவது; "சென்னை சேப்பாக்கத்தில் உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கிய போது அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது.
இப்போது அது நடந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அணியின் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பினேன். இதுவரை நடந்து முடிந்திருக்கும் 7 போட்டிகளில் வீரர்கள் பலர் முன்னின்று வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் தெளிவானவர். பெரிய போட்டிகளில் அவர் மிக சிறப்பாக விளையாடக்கூடியவர் தான். அந்த வகையில் இன்று (நவ.02) அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதேபோல் முகமது சிராஜ் திறமையான பந்து வீச்சாளர். குறிப்பாக அவர் புதிய பந்துடன் செயல்படுகையில் நிறையத் திறன்களை வெளிக்காட்டக் கூடியவர்" என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் ஆலோசனைப்படி டிஆர்எஸ் முடிவை எடுத்திருந்தார் ரோகித் சர்மா. அது குறித்து அவர் பேசியதாவது; "பொதுவாக டிஆர்எஸ் முடிவை விக்கெட் கீப்பர் மற்றும் பந்து வீச்சாளர்களின் விட்டுவிடுவேன். அவர்களின் ஆலோசனைக்குப் பின்பே அந்த முடிவை எடுப்பேன். சில நேரம் சரியாக இருக்கும், அதுவே சில நேரங்களில் அது தவறாக அமையலாம்.
மேலும், அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அந்த போட்டி கொல்கத்தா மக்களுக்கு ரசிக்கும் படியாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: IND Vs SL: ஷமி, சிராஜ் பந்து வீச்சில் சுருண்ட இலங்கை.. 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி!