மும்பை: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த தொடரின் 23 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, விளையாடிய 5 போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன், பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணி வரும் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில், புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு, அதன்பின் சிகிச்சை பெற்று வரும் அவர் இன்னும் முழுமையான உடல் தகுதி பெறாததால், அடுத்த 2 போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் அகாடமி (National Cricket Academy) தரப்பில் கூறியதாவது; "ஹர்திக் பாண்டியா சிகிச்சையில் இருக்கிறார். அவரது இடது காலில் ஏற்பட்ட வீக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் அவருக்கு இன்னும் ஓய்வு தேவை. அவர் இந்த வார இறுதியில் பந்து வீச தொடங்குவார் என தெரிவித்துள்ளது. மேலும், "பாண்டியாவுக்கு எழும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை. பிசிசிஐ மருத்துவக்குழு முன்னெச்சரிக்கை எடுக்க விரும்புகிறது. அதனால் அவர் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை" என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி வரும் 29ஆம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் இலங்கை அணியை சந்திக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியும் இடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு : சாதனைகளை வாரிக்குவிக்கும் இந்திய வீரர் சுமித் அண்டில்!