கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றின் ரிசர்வ் டே ஆட்டம் இன்று (செப். 11) அதே மைதானத்தில் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் தங்களுக்குள் மோதி அதில் முதல் இரு இடங்களை பிரிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், நேற்று (செப். 10) கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் அணியின் பந்து விச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது. தொடர்ந்து ரோகித் சர்மா 56 ரன், சுப்மான் கில் 58 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, விராட் கோலி, கே.எல். ராகுல் இணை ஜோடி சேர்ந்தது. நிதான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தனர்.
ஆட்டத்தின் 24 புள்ளி 1 ஓவரில் மழைக் குறுக்கிட்டது. இதனால் சிறிதி நேரத்தில் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தொடந்து மழை கொட்டி வந்த நிலையில், மைதானமும் முழுவதுமாக ஈரமானது. இதையடுத்து ஆட்டம் ரிசர்வ் டே-க்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று (செப். 11) ரிசர்வ் டே ஆட்டம் நடைபெறுகிறது.
விராட் கோலி (8 ரன்), கே.எல்.ராகுல் (17 ரன்) தொடர்ந்து விளையாட உள்ளனர். ஆட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் குறுக்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படி தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.
இந்த ஆட்டமட்டுமின்றி அடுத்து வரும் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியிலும் கூட மழையின் தாக்கம் இருக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : IND VS PAK: மழையால் ஆட்டம் நிறுத்தம்.. மீண்டும் நாளை தொடக்கம்!