ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் ஆகிய தொடர்களில் பங்கேற்கிறது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் நாடு திரும்பவுள்ளார்.
இதனால் இந்திய அணி பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என கூறப்பட்டுள்ளதால், அவர் களமிறங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக மயாங்க் - ரோஹித் இணை களமிறங்குவதற்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
ஒருவேளை அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால், இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம். ஆனால் ப்ரித்வி ஷாவின் ஐபிஎல் ஃபார்ம் பிரச்னை உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இளம் வீரர்கள் ப்ரஷரை தாக்குப்பிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதைப்பற்றி இந்திய கிரிக்கெட் முன்னாள் விரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறுகையில், ''இந்திய கேப்டன் விராட் கோலி இல்லையென்றால் அவரது இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் உள்ளனர். அடுத்தமாதம் தான் டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளதால், அதனை பயிற்சியாளர்கள் குழுவும், அணி நிர்வாகமும் எளிதாக கண்டடைவார்கள் என்ற தெரிகிறது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடுவோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். வலைப்பயிற்சியில் எந்த வீரர் அனைவரையும் ஈர்க்கிறாரோ, அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்'' என்றார்.
கோலியின் நிலைப் பற்றி ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், ''கோலியின் இடத்தை நிரப்புவது இந்தியாவுக்கு எளிதான காரியமல்ல. ஏனென்றால் பேட்டிங் மட்டுமல்ல, களத்தில் அவர் கொண்டுவரும் எனர்ஜி, பேஷன் ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: ரோஹித் ஷர்மா இல்லாதது சாதகம் தான், ஆனால் ராகுல் இருக்கிறார்' - மேக்ஸ்வெல்