ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ளது.
இதனிடையே தெற்கு ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், மேத்யூ வேட் ஆகியோர் தனிவிமானம் மூலம் நியூ சவுத் வேல்ஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் திட்டமிட்டபடி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், நிச்சயம் நடக்கும் என கூறியது. ஆனால் ஒவ்வொரு நாளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றி தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை பொது சுகாதார அலுவலர் நிக்கோலா ஸ்பூரியர் பேசுகையில், '' நாளை என்ன நடக்கும் என்பதை கூற முடியாது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அவையனைத்தையும் செய்து வருகிறோம். தெற்கு ஆஸ்திரேலியாவின் எல்லையை அடைத்துள்ளோம். ஊரடங்கு விதித்து மக்களை கடுமையான நிலைக்கு தள்ளியுள்ளோம். கிரிக்கெட் போட்டி நடத்த முடியுமா என்பதை நிச்சயம் சொல்ல முடியாது. சூழலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறோம்'' என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி 27ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு வந்தடைந்த ரோஹித்!