ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி வரும் நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆஸி. அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரு டை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியா நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''கேன் ரிச்சர்ட்சன் தன் மனைவி நிக்கியுடனும், புதிய பிறந்த மகனுடன் அடிலெய்டிலேயே இருக்க விரும்புகிறார். அதனால் இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகுகிறார். இது நிச்சயம் அவருக்கு கடினமாக முடிவாக இருந்திருக்கும். அவரது முடிவுக்கு தேர்வுக் குழு உறுப்பினர்களும், ஆஸி. அணியும் ஆதரவாக உள்ளது.
அவரால் ஆஸி. அணியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மிஸ் செய்கிறோம். அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை தேர்வுப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நிச்சயம் அவர் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று நினைக்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அட்லெய்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாகி வருவதால், ஆஸி. வீரர்கள் அனைவரையும் தனி விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓய்வு அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி!