மெல்போர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியில் எந்த மாற்றம் இல்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
சிட்னியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்று நம்பிக்கை அளித்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி (பாக்ஸிங் டே டெஸ்ட்) மெல்போர்னில் வரும் சனிக்கிழமை (டிச. 26) நடைபெறுகிறது.
பாக்ஸிங் டே (Boxing Day)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள், அதாவது டிசம்பர் 26ஆம் நாள் ஆண்டுதோறும் பாக்ஸிங் டே கொண்டாடப்படுகிறது. அன்று டெஸ்ட் போட்டி தொடங்கப்பட்டால், அந்த டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியில் எந்த மாற்றம் இல்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்வாகும் வீரருக்கு, ஜானி முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில், பூர்விகக் குடியின் சார்பில் அணியினர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதக்கம் வழங்கப்பட உள்ளது.
ஜானி முல்லாக்
1868ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பூர்விகக் குடிகள் சார்பில் ஒரு கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு, முதல் முறையாக இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட ஜானி முல்லாக் தலைமையில் அணி சென்றது.
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற முதல் ஆஸ்திரேலிய அணி என்பதால் அந்த அணியின் கேப்டன் முல்லாக்கைப் பெருமைப்படுத்தும்விதத்தில் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
பலவீனம்
இந்திய அணிக்கு அணியின் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் தொடரிலிருந்து விலகியது, தொடரை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களம் இறங்கும் இந்திய அணியை மேலும் பலம் இழக்கச் செய்துள்ளது.
வார்னர், சீன் அபேட் ஆகிய இருவரும் காயம் காரணமாக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா அணி விவரம்...
ஆஸ்திரேலியாவின் பிளேயிங் 11: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: வார்னர், அபேட் விலகல்