ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடந்தது. அதில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு மயாங்க் அகர்வால் - தவான் இணை தொடக்கம் கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடிய இந்த இணை 53 ரன்கள் சேர்த்தது. அப்போது மயாங்க் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஆடிய நான்காவது பந்திலேயே கம்மின்ஸ் பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் கோலி கேட்ச் கொடுக்க, அதை ஸாம்பா தவறவிட்டார்.
இதனை பயன்படுத்தி அதே ஓவரில் கோலி அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். நன்றாக ஆடி வந்த கோலி, ஹசல்வுட் வீசிய பந்தில் ஃபின்ச் இடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸிம் 2 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை கரைக்கு இழுத்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், 12 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர்.
பின்னர் தவான் - ஹர்திக் இணை சேர்ந்தது. இந்த இணை நிதானமாக ரன்குவிக்க, ஹர்திக் பாண்டியா ஸ்பின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். இந்த இணை நிதானமாக ஆடினாலும், ரன் ரேட்டை குறைக்கவிடாமல் ஆடியது.
101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் 29 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. இதனிடையே இரு வீரர்களும் அரைசதம் கடந்து அசத்தினர்.
ஸ்பின் பந்துவீச்சாளர்களின் பந்துகள் ஹர்திக்கிடம் எடுபடாமல் போக,ஆரோன் ஃபின்ச் ஸ்டோய்னிஸிடம் பந்தைக் கொடுத்தார். ஆனால் அவரும் சில நேரங்களில் காயம் காரணமாக வெளியேற, வேறு வழியின்றி மீண்டும் பந்து ஸாம்பா கைகளுக்கு சென்றது.
அப்போது ஷிகர் தவான் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹர்திக்கின் பொறுப்பு கூடியது. அந்த நேரத்தில் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர்கள் ரன் ரேட்டை சரியாக பாதுகாக்க, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் 90 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து சிறிது நேரம் போராடிய ஜடேஜா 25 ரன்களில் வெளியேற, இந்திய அணி தோல்வி உறுதியாகியது. தொடர்ந்து ஷமி - சைனி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. இறுதியாக இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஹசல்வுட் 3 விக்கெட்டுகளும், ஸாம்பா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியை வென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 62 பந்துகளில் சதம் விளாசிய ஸ்டீவ்