நாக்பூர்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சில் அந்த அணி 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்களும், ஸ்மித் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். 120 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இன்று (பிப்.11) 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மர்ஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 84 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
முகமது சமி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மர்ஃபி 7 விக்கெட்களை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தது. கவாஜா(5), வார்னர்(10), லபுஷேன்(17) என ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
அனைத்து விக்கெட்களையும் இழந்து 91 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. ஸ்மித் மட்டும் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட்களை எடுத்தார். ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்களும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதுவே குறைந்தபட்ச ஸ்கோர்: நாக்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு சுருண்டது. இதுவே அந்த அணி இந்திய மண்ணில் எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற போட்டியில் 93 ரன்களும், 1959ம் ஆண்டு கான்பூர் டெஸ்ட் போட்டியில் 105 ரன்களும் எடுத்திருந்தது.
இதையும் படிங்க: Rishabh pant: "முன் செல்லடா, முன்னே செல்லடா" மீண்டு வந்த ரிஷப் பண்ட் புகைப்படம்!