கொல்கத்தா: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் முதல்போட்டி மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இரண்டாவது டி20 போட்டி பிப்.18ஆம் தேதி நடந்தது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தனர். 187 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 2ஆவது போட்டியிலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று(பிப்.20) மூன்றாவதும், கடைசியுமான டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீரர்கள் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளுக்கு 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் வெங்கடேச ஐயர் 19 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்து வலுசேர்த்தார்.
185 ரன்கள் இலக்கு
இதையடுத்து 185 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் நிக்கோலஸ் பூரன் கடந்த இரண்டு ஆட்டங்களை போலவே அதிரடியாக விளையாடி 47 பந்துகளுக்கு 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இதனிடையே ரோவ்மேன் பவல் 25 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்பர்ட் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு மேற்கிந்திய தீவுகள் அணி 167 ரன்களுடன் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரைப்போலவே டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றி அபார சாதனை படைந்துள்ளது.
இதையும் படிங்க: IN vs WI T20: இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி