செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்: இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட மேற்கு இந்தியத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வைட்-வாஷ் செய்தது.
3 மணிநேரம் தாமதம்: முதல் டி20 போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி மேற்கு இந்தியத்தீவுகளின் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் நாட்டில் உள்ள பாசெட்டர் நகரில் நேற்று (ஆக. 1) நடைபெற்றது.
வீரர்களின் உபகரணங்கள் மற்றும் பொருள்களை கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க இருந்த போட்டி, இரவு 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பொருள்கள் மைதானத்திற்கு வர மீண்டும் தாமதமானதால் போட்டி இரவு 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ரோஹித் டக்: அதன்படி, டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி கேப்டன் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும், ஷர்மார்க் ப்ரூக்ஸ், கீமோ பால் ஆகியோருக்கு பதிலாக பிரண்டன் கிங், டேவான் தாமன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தியா சார்பில் ரவி பீஷ்னாய்க்கு பதிலாக ஆவேஷ் கானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஓபெட் மெக்காயின் வீசிய அந்த பந்தில் ரோஹித் சர்மா டக்-அவுட்டாகி வெளியேறினார். அதன்பின், இந்திய பேட்டர்களை திணறடித்து மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தனர்.
மிரட்டிய மெக்காய்: வலுவான பார்ட்னர்ஷிப் இல்லாமல் மந்தமாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 31 (31) ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 27 (30) ரன்களையும் எடுத்தனர். மே.இ.தீவுகள் பந்துவீச்சுல் ஓபெட் மெக்காய் 17 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, 139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மே.இ. தீவுகள் அணிக்கு பிரண்டன் கிங் அசத்தலான தொடக்கத்தை அளித்தார். பிரண்டன் கிங், கையில் மேயர்ஸ் ஜோடி பவர்பிளே முடிவில் 46 ரன்களை எடுத்திருந்தது. பவர்பிளே முடிந்து அடுத்த பந்தில், கையில் மேயர்ஸ் 8 ரன்களில் ஹர்திக் பாண்டியாவிடம் வீழ்ந்தார்.
கிங் அதிரடி: பின்னர், பிரண்டன் கிங் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பூரனும் அதிரடியை தொடங்கினார். இருப்பினும் பூரன் 14 (11) ரன்களிலும், ஹெட்மயர் 6 (10) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, தேவான் தாமஸ் - கிங் ஜோடி சற்று நேரம் நிலைத்தது. தாமஸ் பொறுமை காட்ட, கிங் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். ஆவேஷ் கான் வீசிய 16ஆவது ஓவரில், அவரின் அற்புதமான யாக்கரால், கிங் 68 (52) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாவெலும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது.
கடைசி ஓவரில், மே.இ.தீவுகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் பந்துவீச வந்தார். முதல் பந்தையே ஆவேஷ் நோ-பாலாக வீச, ஃப்ரீ-ஹிட் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட தாமஸ், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம், மே.இ. தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.
ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஓபெட் மெக்காய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டி20 போட்டி இதே வார்னர் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஆக. 2) இரவு 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நிச்சயமாக ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவோம்..!' - கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன்