அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் "நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எங்களால் முடிந்த வரை அனைத்தையும் முயற்சித்தோம். ஆனால் எதுவும் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி நல்ல கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ரன்களை அடிப்போம் என எதிர்பார்த்தோம் ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் முயற்சித்தோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்துவிட்டது என நான் நினைக்கிறேன். ஆனால் அதை நான் தோல்விக்கான காரணமாக நான் கூற விரும்பவில்லை. 240 ரன்கள் எடுத்து களத்தில் இறங்கும் போது எதிர் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷென் ஆகியோர் நல்ல பார்ட்னர்சிப் அமைத்து எங்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார்கள் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் அதன் தாக்கம் வேறு விதமாக இருந்து இருக்கும்" எனத் தெரிவித்தார்.
போட்டி சுருக்கம்: 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி - பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை நேற்று (நவ.19) எதிர்கொண்டது. அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 240 ரன்களை சேர்த்தது. கே.எல். ராகுல் மற்றும் கோலி ஆகியோர் அரைசதம் கடந்தனர். பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா.
இதையும் படிங்க: சாதனையில் டோனியை முந்திய கே.எல்.ராகுல்! அப்படி என்ன சாதனை தெரியுமா?