ஐதராபாத் : சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
இதற்கு முன் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போல் இல்லாமல் நடப்பு தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தொடர் தொடங்கி 8 ஆட்டங்கள் நிறைவு பெறுவதற்குள் 10 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக கடந்த 7ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மூன்று சதம் விளாசினர்.
இந்நிலையில், முதல் 8 ஆட்டங்களை அடிப்படையாக கொண்டு சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்களை அடித்த இந்திய வீரர் விராட் கோலி, சர்வதேச தரிவரிசையில், இரண்டு இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்து உள்ளார்.
அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசிய கே.எல்.ராகுல் கிடுகிடுவென 20 இடங்கள் முன்னேறி டாப் 20 தரவரிசைக்குள் நுழைந்தார். தற்போது 19வது இடத்தில் கே.எல்.ராகுல் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கோலி - ராகுல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 165 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் சர்வதேச தரவரிசையில் ஒரு இடம் உயர்ந்து 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதேபோல் தர்மசாலாவில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஏழு இடங்களில் முன்னேறி தரவரிசையில் 8வது இடத்தை பிடித்து உள்ளார்.
அதேநேரம் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3 இடங்கள் சரிந்து 9வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை முதல் இடத்தில் இருந்த இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 தரவரிசை புள்ளிகளை இழந்ததை அடுத்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மற்றொருபுறம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்து உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டாப் 40 தரவரிசைக்கு வெளியே நீடிக்கிறார்.
இதையும் படிங்க : India Vs Pakisan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? அப்படி என்ன சாதனை தெரியுமா?