பெங்களூரு: 13வது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 128 ரன்களும், கே.எல்.ராகுல் 102 ரன்களும் விளாசினர். பின்னர் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் கூறுகையில் “லீக் போட்டிகள் முழுவதிலும் பந்து வீச்சில் சிறந்து விளங்கும் முகமது சிராஜ், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்சை தவறவிட்டது மட்டுமின்றி, அவருக்குத் தொண்டையில் காயமும் ஏற்பட்டது.
இதனால் இந்தப் போட்டி முழுவதும் சிராஜ் அவுட்ஃபீல்டில் சற்று தொய்வாக இருந்தது. இருப்பினும், அவரது பீல்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. இந்த தொடர் முழுவதையும் எடுத்துப் பார்த்தால், அவரின் அர்ப்பணிப்பு சிறப்பாக உள்ளது. முக்கியமான போட்டிகளில் பிரதிபலிக்கும் திறமை சிராஜிடம் உள்ளது. அவரின் உடல் நலத்தில் எவ்வித பிரச்னைகளும் இல்லை.
நடந்து முடிந்துள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய கரணம் அணியில் உள்ள அனைவரும் குழுவாக இணைந்தும் தங்களது வேலையை சிறப்பாக செய்கின்றனர். மேலும், ஒவ்வொரு போட்டியிலும் நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு போட்டிக்குப் பின்னர் அன்றைய தினம் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்படும். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை கொண்டாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
நேற்றைய போட்டியில் 9 பவுலர்கள் பயன்படுத்தியது குறித்து திலீப் பேசுகையில், “ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் மற்றும் சூர்ய குமார் யாதவ் போன்ற வீரர்கள் பகுதி நேரமாக பந்து வீசியது ஒரு முக்கியமான அணுகுமுறையாகும்.
இந்தியாவின் அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி, வேகப்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். வருகிற நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறோம். அன்றைய தினம் ஒரு நல்ல போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விராட் கோலி விக்கெட் முதல் கே.எல்.ராகுல் விளாசிய சதம் வரை இந்தியாவின் அசாத்தியமான சாதனைகள்!