ஹைதராபாத்: 13வது ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த (அக். 5) தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடப்பெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி 6 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று புள்ளி பட்டிலில் 2வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ. 2) நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் இந்திய - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணி ஏறத்தாழ அரையிறுதி சுற்றில் கால் பதித்துவிட்டது. இருப்பினும் இன்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்றை உறுதி செய்ய இந்தியா போராடும்.
இந்நிலையில் கடந்த அக்.19 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்து கொண்டு இருக்கும் போது இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் பாண்டியாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசை பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் மற்றும் முகமது ஷமி அணியில் சேர்க்கபட்டனர். இந்த நிலையில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் தற்போது உடல் காயத்தில் இருந்து பாண்டியா மெல்ல மீண்டு வருகிறார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாண்டியாவிற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதிலும் அவர் விளையாடவில்லை என்றால் நேரடியாக அவர் அரையிறுதி போட்டியில் பங்கு பெறுவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் "உலகக் கோப்பை போட்டிகள் 3 அல்லது 4 நாள்களுக்கு ஒரு முறை நடப்பெற்று வருகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்டு இருக்கும் காயம் எந்த அளவிற்கு மேம்பட்டு இருக்கிறார் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விரைவில் பாண்டியா அணிக்குத் திரும்புவார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்! யார் அவர்?