கரோனா பெருந்தொற்று காரணமாக காலவரையின்றி 14ஆவது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்துடன், "முன்பைவிட ஒவ்வொரு விடியலிலும் நான் வலுவாக எழுந்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதன்பின் டி20, டெஸ்ட் அணிகளிலும் இடம்பெற, ஒரே சுற்றுப்பயணத்தில் அனைத்து ஃபார்மேட்களிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குமான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் காயம் காரணமாக நடராஜன் சேர்க்கப்படவில்லை. மேலும், போதுமான போட்டிகளில் அவர் விளையாடாததால் இந்திய அணியின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலிலும் நடராஜன் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பால் டேம்பரிங் முறைகேடு: மீண்டும் விசாரணை நடத்த தயார்!