அகமதாபாத் : கிரிக்கெட்டின் ஹை வோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் வரும் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் அகமதாபாத் நகரமே ஜனநெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. அதேநேரம் அகமதபாத் நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நிர்வாகங்கள் வசூலிப்பதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்னிட்டு அகமதாபாத் நகரில் பல்வேறு முன்னேற்பாடுகள் களைகட்டி உள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தை காண ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், மற்றும் ஹோட்டல்கள் பெரும்பாலும் முழுவதுமாக நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண படுக்கை வசதிகள் கொண்ட அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை தனியார் ஹோட்டல் நிர்வாகங்கள் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் சில விடுதிகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களின் நிதி நிலை கருத்தில் கொண்டு 30 ஆயிரம் ரூபாய் வரை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சில ஐந்து நட்சத்திர விடுதிகள் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காரணம் காட்டி வாடிக்கையாளர்களிடம் நாளொன்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை வசூலிப்பதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் பிசிசிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் விடுதிகளில் காலியாக இருக்கும் அறைகள் என்றால் அதற்கு தனி விலை எனக் கூறப்படுகிறது.
போட்டிக்கான அட்டவணை வெளியிட்டதுமே வெளிநாட்டு பயணிகள் அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் அறைகளை புக்கிங் செய்து விட்டதாகவும், அதேநேரம் ஆட்டத்திற்கான டிக்கெட் அல்லது விசா உள்ளிட்டவைகள் கிடைக்காமல் போகும் பட்சத்தில் சில வெளிநாட்டு பயணிகள் தங்களது முன்பதிவை ரத்து செய்யும்பட்சத்தில் விடுதிகளின் கட்டணங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : India Vs Pakisan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? அப்படி என்ன சாதனை தெரியுமா?