இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.
இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலையுடன் உள்ளது.
இங்கிலாந்து தொடர்
இதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 2) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கை இரண்டாவது நாளான இன்றும் தொடர்ந்து ஆடிவருகிறது.
கேம்-ரீடர்
இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் நிலை டெஸ்ட் பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின், இத்தொடரின் நான்கு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை.
கேம்-ரீடர் எனப் பெயர் பெற்ற அஸ்வினின் பந்துவீச்சு உலகத்தர பேட்ஸ்மேன்களையும் தடுமாறச் செய்யும். 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஸ்டீவ் ஸ்மித்தை பலமுறை ஆட்டமிழக்கச் செய்ததை ஓர் உதாரணமாகக் கூறலாம்.
அவர் விளையாடிய கடைசி 13 போட்டிகளில் 42 விக்கெட்டைகளை வீழ்த்தியுள்ளார் என்பது அசாதாரணமானது. அப்படியிருக்க, அவரை இத்தொடரில் ஒரு போட்டியில்கூட அணியில் சேர்க்காதது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அஸ்வினுக்கு இடமில்லையா?
முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், வல்லுநர்கள் என அனைத்துத் தரப்பினரும் கேப்டன் கோலியின் முகத்தைக் கேள்விக்குறியோடு பார்த்துவருகின்றனர்.
இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் ஒரு சிம்மசொப்பனம். அப்படியிருக்க, பல இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான போட்டிகளில் அவர் சேர்க்கப்படாதது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. லார்ட்ஸில் வெற்றிபெற்றிருந்தாலும், லீட்ஸில் படுதோல்வி அடைந்திருந்தது இந்தியா.
இதனால், நேற்று ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் போட்டியிலாவது அவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த தடுமாறிவரும் வேளையில், அவரின் சாதனைகள் குறித்தும், இந்திய டெஸ்ட் அணியில் அவரின் தேவை குறித்தும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிய அளவில் 150 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸை கடந்த விராட் கோலி