இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
இதையடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் உடல் நலக்குறைவு காரணமாகவே நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார் என இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) தெரிவித்தது.
இது குறித்து இசிபி வெளியிட்ட அறிக்கையில், "வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருடைய உடல்நிலை குறித்தான முன்னேற்றங்களை மருத்துவக்குழு அறிவிக்கும்" எனத் தெரிவித்தது.
மேலும், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கும் கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது, இங்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அணி நிர்வாகிகளும் வயிற்று வலியால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். எனினும் பென் ஸ்டோக்ஸ் நேற்றைய ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டார். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 55 ரன்களைக் குவித்தார்.
அகமதாபாத்தில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றத்தால் இங்கிலாந்து குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக திடீரென அதிகரித்த வெப்பத்தினால் இங்கிலாந்து குழுவில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். துணைப் பயிற்சியாளர் பால் காலிங்வுட் கடுமையான வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், "இங்கு சில பிரச்சினைகள் எங்களைத் தொடர்கின்றன. நாங்கள் அதைக் கவனமாக கண்காணித்துவருகிறோம். உண்மையைச் சொல்வதென்றால் அணியில் எத்தனை பேர் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை.
ஆனால், எங்கள் அணியினரைப் போட்டிக்குச் சிறந்த முறையில் தயார்செய்தும், வரவிருக்கும் போட்டிகளுக்கு அணித் தேர்வினைச் சிறப்பாக அமைக்கவும் கடுமையாக முயற்சித்துவருகிறோம்" என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
இந்திய அணியினருக்கு இதுபோன்று எந்தப் பிரச்சினைகளும் இல்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து பேசிய கோலி, "உடல் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் உடற்தகுதியோடுதான் இருக்கிறோம்.
காலநிலை மாற்றத்தினால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம். கடந்த இரண்டு நாள்களாக வெப்பம் மிகவும் அதிகமாகவுள்ளது. இம்மாதங்களில் காலநிலை மாற்றம் என்பது பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கும். இது அவர்களுக்குப் பழகுவதற்கு சில நாள்கள் ஆகலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 90’ஸ் ஹீரோக்கள் ரீ எண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!