லண்டன் (இங்கிலாந்து): இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை சேர்த்தது.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 129, ரோஹித் 83, விராட் கோலி 42, ஜடேஜா 40, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளையும், ராபின்சன், மார்க் வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து இன்னிங்ஸ்
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸ்-ஐ தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜோசப் பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி ஆகியோர் களமிறங்கினர்.இந்த இணை, தேநீர் இடைவேளைக்கு முன்புவரை (14 ஓவர்கள்) 23 ரன்களை சேர்த்தது.
வரிசையாக விக்கெட்
தேநீர் இடைவேளைக்கு பின்னர், முதல் ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின், இரண்டாவது பந்தில் சிப்ளி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நீண்ட நாள் கழித்து அணியில் இடம் பெற்றிருந்த ஹமீத் ஹசீப், அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கோல்டன்-டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்ததாக, பர்ன்ஸூடன் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்தார். இந்த இருவரையும் செட்டில் ஆக விடாமல், விரைவில் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற பதற்றம் கோலி & கோ-வுக்கு ஏற்பட்டது. இந்த அழுத்தத்தில் இந்தியா இரண்டு ரிவ்யூ வாய்ப்புகளை இழந்தது.
ஷமி மேஜிக்
பர்ன்ஸ் அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், முகமது ஷமி பந்து வீச வந்தார். முகமது ஷமியின் அந்த ஓவரிலேயே பர்ன்ஸ் 49 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் நடையைக் கட்டினார். இதனையடுத்து, சிறிது நேரத்திலேயே இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்து, இந்திய அணியை விட 245 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோவ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி பந்துவீச்சில் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் செஷன் வாரியாக
முதலாவது செஷன்: இந்தியா - 26 ஓவர்கள் - 72/4
இரண்டாவது செஷன்: இந்தியா - 10.1 ஓவர்கள் - 18/3, இங்கிலாந்து - 14 ஓவர்கள் - 23/0
மூன்றாவது செஷன்: இங்கிலாந்து அணி - 31 ஓவர்கள் - 96/3
இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று மதியம் (ஆக. 14) 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்