பர்மிங்ஹாம் (இங்கிலாந்து): இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 416 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை எடுத்தது. இதனால், 132 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அதில், மூன்றாம் நாள் (ஜூலை 3) ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்து, 257 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
தாக்குபிடிக்காத இந்திய பேட்டிங்: இந்நிலையில், புஜாரா 50 ரன்களுடனும், ரிஷப் பந்த் 30 ரன்களுடனும் நேற்றைய (ஜூலை 4) நான்காம் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு உள்ளாகவே, புஜாரா 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் ஷாட்-பிட்ச் பந்தில் அவுட்டானார்.
அரைசதம் கடந்த போட்டியில் 146 ரன்கள் எடுத்து அசத்திய, ரிஷப் பந்த் 57 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜா மட்டும் சற்றுநேரம் தாக்குபிடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 245 ரன்களில் ஆல்-அவுட்டாக, இங்கிலாந்துக்கு 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் விக்கெட் பார்டனர்ஷிப்: ஏறத்தாழ ஒன்றரை நாள்கள் கையிலிருக்கும் நிலையில்,, 157 ஓவர்களில் 378 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஓப்பனர்கள் லீஸ், கிராலி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிராலி 46 ரன்களுக்கும், ஓல்லி போப் ரன்னேதும் இன்றியும், லீஸ் 56 ரன்களிலும் என அடுத்தது ஆட்டமிழந்தனர்.
ரூட் - பேர்ஸ்டோவ்: இதைத்தொடர்ந்து களமிறங்கிய ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி ரன்களை விறுவிறுவென குவித்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், நான்காம் ஆட்டம் நிறைவடைந்தது. தற்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை எடுத்துள்ளது. 57 ஓவர்களே வீசப்பட்டுள்ள நிலையில், ஏறத்தாழ 100 ஓவர்கள் வீசப்பட இருக்கின்றன. இங்கிலாந்துக்கு இன்னும் 119 ரன்களே தேவை. எனவே, 90 விழுக்காடு இங்கிலாந்தின் பக்கமே ஆட்டம் இருக்கிறது.
மேஜிக் நிகழுமா?: நேற்றைய அதிரடி ஆட்டத்தை ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஆகியோர் இன்றும் தொடர்ந்தால், முதல் செஷனிலேயே ஆட்டம் முடிந்துவிடும் வாய்ப்புள்ளது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் யாரேனும் அற்புதமாக வீசினால் மட்டும் இந்தியா அசாத்திய வெற்றியை பெற முடியும்.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவு
முதல் செஷன் : இந்தியா - 28 ஓவர்கள் - 104 ரன்கள்; 4 விக்கெட்டுகள்
இரண்டாம் செஷன்: இந்தியா - 8.5 ஓவர்கள் - 16 ரன்கள்; 3 விக்கெட்டுகள்
இங்கிலாந்து - 23 ஓவர்கள் - 107 ரன்கள் - 1 விக்கெட்
மூன்றாம் செஷன்: இங்கிலாந்து - 34 ஓவர்கள் - 152 ரன்கள் - 2 விக்கெட்
இதையும் படிங்க: ஷஃபாலி, மந்தனா அபாரம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!