12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெறவிருக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி 15 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலை அறிவித்திருந்தது. அவர்களுக்கு அடுத்தப்படியாக, 23 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி குழு வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் திங்கட்கிழமை மும்பையில் அமைந்துள்ள பிசிசிஐ அலுவலகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் தலைமையில் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில், நான்காவது வரிசைக்காக எந்த வீரரை தேர்வு செய்வார்கள், இந்திய அணியில் தோனியைத் தவிர, கூடுதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் இவர்களில் யார் அணியில் இடம்பெறுவார்கள் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு வரும் 15 தேதி விடை தெரியும் என தெரிகிறது.
இதனிடையே, நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது இந்திய வீரர் பும்ரா காயமடைந்ததால், அவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி ஜூன் 5ஆம் தேதி சவுத்ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.