12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் 15 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியல் வெளியானது.
இதனிடையே, 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. 2018 அக்டோபர் மாதம் வரை இலங்கை அணியின் கேப்டனாக செயல்புரிந்த தினேஷ் சண்டிமால் இம்முறை அணியில் இருந்து கழட்டிவிட்டனர். அதேபோல், நிரோசன் டிக்வெல்லா, அகிலா தனஞ்சயா, தனுஷா குணதிலாக, உபுல் தரங்கா ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த நான்கு வருடங்களாக ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத திமுத் கருணாரத்னே இலங்கை அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணி விவரம்: திமுத் கருணாரத்னே (கேப்டன்), லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, குசல் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, குசல் மெண்டிஸ், இஸ்ரூ உதனா, மிலிண்டா ஸ்ரீவர்தனா, அவிஸ்கா ஃபெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ், லஹிரு திரிமன்னே, ஜெஃப்ரே வாண்டர்சே, நுவன் பிரதீப், சுரங்கா லக்மல்
![Srilanka](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/3047838_dim.jpg)
நீடிக்கும் கேப்டன் குளறுபடி:
2013க்கு பின்னர் தற்போது வரை இலங்கை அணியில் 8 வீரர்கள் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். ( தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, உபுல் தராங்கா, கபுகேதேரா, லசித் மலிங்கா, திசாரா பெரேரா, திமுத் கருணாரத்னே)
மோசமான நிலைக்கு சென்ற இலங்கை அணியின் ஆட்டத்திறனை சரிசெய்யும் முயற்சியில் இவர்களுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், ஒவ்வொரு முறையும் கேப்டன்களை மாற்றிவந்ததால், அணியில் ஏரளமான குளறுபடிகள் நடந்தன. அதுமட்டுமின்றி, அணியின் ஆட்டத்திறனிலும் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் வரவில்லை.
கேப்டன்கள் விவரம்:
வீரர்களின் பெயர் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமனில் முடிந்த போட்டிகள் | முடிவு இல்லை |
மேத்யூஸ் | 101 | 49 | 51 | 1 | 5 |
கபுகேதேரா | 1 | 0 | 1 | 0 | 0 |
தினேஷ் சண்டிமால் | 12 | 6 | 5 | 0 | 1 |
லஹிரு திரிமன்னே | 3 | 1 | 2 | 0 | 0 |
உபுல் தராங்கா | 22 | 4 | 16 | 0 | 2 |
திசாரா பெரேரா | 3 | 1 | 2 | 0 | 0 |
4 கேப்டன் ஒரே அணியில்:
தற்போது அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் திமுத் கருணாரத்னேவைத் தவிர இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்களாக இருந்த ஐந்து வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ( ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, உபுல் தராங்கா, லசித் மலிங்கா, திசாரா பெரேரா)
திமுத் கருணாரத்னே:
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்த்தில் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்று சாதனைப் படைத்தது. அந்தக் காரணத்தினால்தான் இவருக்கு இலங்கை அணியின் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டன் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி தனது முதல் போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜூன் 1ஆம் தேதி கார்டிஃப் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது