ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வங்கதேச அணி நிர்வாகம் இந்த தொடருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையை நேற்று முன்தினம் வெளியிட்டது.
அந்த புதிய உடை முற்றிலும் பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. ஏனெனில், வங்கதேச அணியின் உடையில் அந்நாட்டு கொடியின் நிறத்தைப்போன்று பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், உலகக்கோப்பைக்கான உடையில் முழுவதும் பச்சை நிறமாக மாறியிருப்பதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் கடும் விமர்சனங்களை செய்தனர்.
இதையடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிஸாமுதின் சௌத்திரி, உலகக் கோப்பைக்கான உடையில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி அந்த உடையில் சிவப்பு வண்ணம் சேர்க்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக வங்கதேச அணி அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதைத்தொடர்ந்து ஜுன் 2ஆம் தேதி நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அந்த அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.