மும்பை: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை (நவ.02) இதன் 33 வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. நடப்பாண்டு உலகக் கோப்பையில் தோல்வியையே காணாத இந்திய அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணியில் பேட்டிங், பெளலிங், பில்டிங் என அனைத்திலுமே அசத்தி வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பேட்டிங்கில் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். இதுவரை பேட் செய்த 6 போட்டிகளில் அவர் 398 ரன்களை விளாசியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த சமயத்தில், களத்தில் நிலைத்து நின்று அணிக்காக 87 ரன்கள் சேர்த்தார்.
அதேபோல் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு கூடுதல் பலமாக உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உள்ளார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதம் விக்கெட்களை கைப்பற்றி அசத்தி வருகிறார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தலான பார்மில் உள்ளார்.
மறுபக்கம் இலங்கை அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர். இவர்களது பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலையை சரியாக செய்யாததால் இவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும், கடைசியாக ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் இலங்கை அணியை மிக சுலபமாக இந்திய அணி வீழ்த்தியது. அதனால், இலங்கை அணி பந்து வீச்சில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்களோ, அந்த அளவிற்கு இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும்.
மோதும் அணிகள்: இந்தியா - இலங்கை.
நேரம்: பிற்பகல் 2 மணி.
இடம்: வான்கடே மைதானம், மும்பை.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விகீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.
இலங்கை: பதும் நிசங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (கேப்டன் & விகீ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மஹேஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க.
இதையும் படிங்க: Glenn Maxwell: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்!