சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 18) சவுத்தாம்ப்ட்டனில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இப்போட்டியைக் காண மைதானத்தில் குறைந்த அளவிலான ரசிகர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
ரத்தானது முதல் நாள்
இந்நிலையில், சவுத்தாம்ப்ட்டனில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் ஒரு பந்துகூட வீசப்படமால் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
144 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை யார் வெல்லப்போகிறார்கள் என்று உற்சாக வெள்ளத்தில் இருந்த ரசிகர்களை, மழை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளை நமதே?
இதுவரை கேப்டன் பொறுப்பேற்ற பிறகு, கோலியும் கேன் வில்லியம்சனும் ஒரு ஐசிசி தொடரைக்கூட வென்றதில்லை. இதனால் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாளிலாவது (நாளை) மழை இருவரின் வெற்றிக்கும் குறுக்கே வரக்கூடாது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் இன்றைய வேண்டுதலாக உள்ளது.
இருக்குது ரிசர்வ் டே!
மழை காரணமாக போட்டியின் முடிவு பாதிக்கப்படும் எனும்பட்சத்தில், ஐந்து நாள் முடிவடைந்து ஆறாவது நாளான (ஜுன் 23) 'ரிசர்வ் டே'-வில் போட்டி நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. ரிசர்வ் டே வேண்டுமா வேண்டாமா என்பதை போட்டி நடுவர்கள்தான் அறிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: WTC FINAL: அஸ்வினின் மனைவி வெளியிட்ட மேட்ச் அப்டேட்