டெல்லி உத்தம் நகர் தெருவில் ஒரு பையன் கிரிக்கெட் ஆடிட்டு இருக்கான். இப்படியே தெருவுல ஆடிட்டு இருந்தா இந்தப் பையனோடு திறமை எல்லாம் வீணா போய்விடும்னு ஒரு கிரிக்கெட் அகாதெமியில் சேர்த்துவிடுகிறார்கள் அவனின் குடும்பத்தினர். ஒன்பது வயசுல இருந்தே கிரிக்கெட்தான் கதி என்றிருப்பவன். 'கிரிக்கெட் அகாதெமிக்கு பயிற்சிக்காக வரும் சிறுவனை வீட்டிற்கு செல் என துரத்தினால் மட்டும்தான் மைதானத்திலிருந்து வெளியேறுவான்; அவனை வெளியேற்றுவது அவ்வளவு சுலபமல்ல' என சிறுவனின் பயிற்சியாளர் சொல்கிறார்.
2002ஆம் ஆண்டில் ஒரு வாய்ப்பு... டெல்லி 15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில 'உம்ரிக்கர் டிராபி'யில் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சிறப்பாக விளையாடி 172 ரன் அடிக்கிறான்... அதே தொடர் அடுத்த வருடம் நடைபெறுகிறது... அதே ப்ளேயர் இந்த முறை கேப்டனாக களமிறங்குகிறான். விளையாடுன போட்டிகளில் 390 ரன்கள். அதில் இரண்டு சதம், இரண்டு அரைசதம். யார் அந்த பையன்னு டெல்லி கிரிக்கெட் வாரியம் தேடி பார்த்தபோது அவன்தான் நாம் இன்று தலையில் தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் விராட் கோலி.
அதன்பின், டெல்லி 17 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக விஜய் மெர்சண்ட் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்படுகிறார். விளையாடிய நான்கு போட்டிகளில் 470 ரன்கள். அதிகபட்சமா 251 ரன்கள்.
2004-05 ஆம் ஆண்டு, மீண்டும் அதே தொடர்... ஏழு போட்டிகள்ல 757 ரன்கள். விஜய் மெர்சண்ட் கோப்பையை விராட் கோலியின் அதிரடியில் டெல்லி அணி வெல்கிறது.
அந்த பெர்ஃபாமென்ஸை பார்த்துவிட்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விராட் தேர்வாகிறார். இந்திய இளைஞர் அணி இங்கிலாந்துக்கு பயணப்படுகிறது. ஒரு நாள், டெஸ்ட் தொடர் இரண்டையும் இந்திய அணி வெல்கிறது.
விராட் கோலி மூன்று ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 105 சராசரி. டெஸ்ட் போட்டிகளில் 49 சராசரி. மிரண்டுபோனார் அப்போதைய அணியின் பயிற்சியாளர் லாலாசந்த் ராஜ்புட்!
அதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்... டெஸ்ட் போட்டிகள் 58 சராசரி... யார் இந்த விராட் கோலி என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெயர் அடிபடத் தொடங்கியது.
அங்கிருந்து அதே வருடம் ரஞ்சி கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு. முதல் போட்டியே தமிழ்நாடு அணிக்கு எதிராக களமிறங்குகிறார்... தனது முதல் போட்டியில் அட்டகாசமாக ஆட வேண்டும் என எண்ணி களமிறங்கியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார் அந்த 18 வயது வீரன்.
அதனையடுத்துதான் 'விராட் கோலி' இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல... உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கண்ணீரை வரவழைத்த போட்டி. விராட் கோலி என்கிற பையன் இளைஞனாக மாறியத் தருணம் அது.
டெல்லி -கர்நாடகா அணிகளுக்கும் இடையேயான அந்தப் போட்டியில் கர்நாடக அணி வீரர் ராபின் உத்தப்பா நிதானமாக 161 ரன்கள் எடுக்க, டெல்லி அணியின் பந்துவீச்சில் கர்நாடக அணி 446 ரன்களை அடிக்கிறது. இரண்டாவது நாளில் டெல்லி அணி பேட்டிங் இறங்குகிறது. கர்நாடக அணியின் பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிகிறது. டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர். 59 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. அப்போதுதான் கோலி - புனித் இணை களத்தில் இருக்கிறது.
அன்றைய நாளின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்துகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்த இணை சிறப்பாக ஆடவில்லையென்றால் நிச்சயம் டெல்லி அணி ஃபாலோ ஆன் பெறும். ரஞ்சி டிராபி போட்டிகளில் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டால் கிட்டத்தட்ட தோல்வியடைவதற்கு சமம். விராட் கோலி நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிவருகிறார்.
அன்றைய இரவு ஒரு அதிர்ச்சி தகவல் வருகிறது! அது... விராட் கோலியின் தந்தை காலமானார் என்று! இதனை விராட் கோலி சற்றும் எதிர்பாராத ஒன்று. தான் உயிருக்குயிராய் நேசித்த தந்தை சடலமாய் இருக்கிறார். உடனடியாக ஒரு உறுதியான முடிவினை எடுக்கிறார்.
அந்த முடிவு சக வீரர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெல்லி அணிக்காக மூன்றாவது நாள் ஆட்டத்தில் களமிறங்குகிறார். ஒவ்வொரு ரன்களையும் நிதானமாக கவனச் சிதறல் சற்றுமில்லாமல் ஆடுகிறார்.
அன்றைய நாளில் (மூன்றாவது நாள்) 34 ரன்களில் பேட்டிங்கை தொடங்கிய கோலி, 238 பந்துகளுக்கு 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கிறார். அதில் 16 பவுண்டரிகளை அடித்தார். டெல்லி அணியின் ஸ்கோரை 59 ரன்களிலிருந்து 211 ரன்களாக உயர்த்தினார். ஆட்டமிழந்ததும் தந்தையின் இறுதிச் சடங்கில் நெஞ்சை அடைத்த துக்கத்தோடு கண்ணீர் மல்க பங்கேற்கிறார். கர்நாடக அணிக்கு எதிரான ஆட்டத்தை டெல்லி அணி டிரா செய்கிறது.
கோலியின் ஆட்டம் குறித்து அப்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளர் கூறுகையில், கடினமான முடிவினை அந்த நேரத்தில் எடுத்து, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் விராட் எனக் கூறுகிறார். அதேபோல் விராட் கோலியின் தாய் கூறுகையில், அன்றைய நாளுக்குப் பின் விராட் பொறுப்பான பையனாக எனக்கு தெரிந்தான் என்றார்.
சிம்பு ஒரு படத்துல சொல்லுவார்... ஐ ஃபீல் லைக் ஏ மேன் (I feel like a man) அப்படினு. சில நாட்களுக்கு முன் அந்த இன்னிங்ஸ் பற்றிய பேச்சில் விராட் கோலியும் அதைத்தான் கூறுகிறார். அந்த ரஞ்சி தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி 257 ரன்கள் எடுக்கிறார்.
அதன் பிறகுதான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்கிறார். 2008ஆம் ஆண்டு, மலேசியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் பங்கேற்கிறது. இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பையைக் கைப்பற்றுகிறது இந்திய இளைஞர் படை. கோப்பையை வென்றுவிட்டு இந்திய இளைஞர் அணிக்கு மிகப்பெரிய பாராட்டுகள் குவிகின்றன.
அப்போதுதான் இந்திய கிரிக்கெட்டில் தோனி கேப்டனாக பொறுப்பேற்று முக்கிய மாற்றங்களை செய்துவருகிறார். ஐசிஎல் தொடருக்கு பதிலாக பிசிசிஐ சார்பாக ஐபிஎல் தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்திய ரஞ்சி டிராபி கிரிக்கெட்டர்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கிரிக்கெட் வளர்ச்சிபெறுகிறது. விராட் கோலி உட்பட முக்கிய இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அங்கிருந்து இந்திய அணிக்குள் நுழைகிறார் விராட். சச்சின், சேவாக், யுவராஜ், தோனி என நட்சத்திர வீரர்கள் இந்திய அணிக்குள் நிரம்பியிருந்த காலம். வாய்ப்பு கிடைப்பதே அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட நேரத்தில், சிறு வயது பையன் ஜாம்பவான்களுக்கு நடுவே கத்தியை சுழற்றி வித்தைக் காட்டுவதுபோல் தனது பேட்டிங்கால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறான்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் நான்காவது இடம் இந்த விராட் கோலி என்னும் இளைஞனுக்கு ஒதுக்கப்படுகிறது. முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை சேவாக் புரட்டி எடுத்ததற்கு பின், தன் பங்கிற்கு மிரட்டலாக சதம் அடிக்கிறான் இந்த துடிப்புமிக்க இளைஞன். இறுதிப் போட்டியில் சச்சின், சேவாக் அடுத்தடுத்து ஆட்டமிழந்த பின்னர் முக்கிய நேரத்தில் களமிறங்கி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகிறான்.
உலகக்கோப்பையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு வெற்றி!
இந்தியாவே கொண்டாடினாலும், விராட் கோலி மனதிற்குள் பெரிதாக எந்த உணர்வுகளும் ஏற்படவில்லை. ஏன் ஏற்படவில்லை என்பது குறித்து அடுத்த பாகத்தில் பார்க்கலாம்...!