கிரிக்கெட் திருவிழா என கொண்டாடப்படும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது லீக் போட்டி இன்று கார்டிஃப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
திரிமான்னே (4), டி சில்வா (4), ஜீவன் மெண்டிஸ் (1), சுரங்கா லக்மால் (7), மலிங்கா (1) ஆகிய ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்னில் அவுட் ஆகினர். அதுமட்டுமல்லாமல், குசால் மெண்டிஸ், மேத்யூஸ், உடானா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும், இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் திமுத் கருணரத்னே 51 ரன்களுடன் இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இறுதியில், இலங்கை அணி 29.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லோக்கி ஃபெர்குசன், ஹன்ரி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.