உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் மழையின் தொடர் ஆதரவால் அதிகமாக பலன் அடைந்துள்ள அணி என்றால் அது இலங்கை அணிதான். ஆப்கானிஸ்தான் அணியை மட்டும் வீழ்த்திவிட்டு புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்தவரை திமுத் கருணரத்னே, குசால் பெரேரா, திரிமான்னே, மேத்யூஸ், திசாரே பெரேரா ஆகியோர் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் லக்மல், பிரதீப், மலிங்கா ஆகியோர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் விளையாடிய நான்கு போட்டிகளில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்துள்ளதால் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் வார்னர் கடந்த போட்டியில் சதம் அடித்து அட்டகாசப்படுத்தியதை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல், மார்ஷ், கவாஜா, கேரி ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது நிச்சயம்.
அதேபோல் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடி தரும் ஸ்டார்க், பவுன்சர்களால் எதிரணியினரை அச்சுருத்தும் பட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் என பந்துவீச்சாளர்களும் விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் மழை வந்து ஆஸ்திரேலியாவிடம் இருந்து இலங்கை அணியை காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.