வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனான ஷாகிப்-அல்-ஹாசன், சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
அதற்கேற்றார் போல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் தனது ஆல்-ரவுண்டர் ஃபெர்பாமென்ஸை காண்பித்து சாதனையையும் படைத்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்து மிரட்டியது. அதில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 78, ஷாகிப் 75 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய பங்காற்றினர்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது 20ஆவது ஓவரில் ஷாகிப் வீசிய பந்தை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி வீரர் எய்டன் மார்க்கெரன் கிளீன் போல்டானார். இது ஒருநாள் அரங்கில் ஷாகிப்பின் 250ஆவது விக்கெட் ஆகும்.
இந்த விக்கெட்டின் மூலம் ஒருநாள் அரங்கில் மிக குறைந்த போட்டிகளில் (199) விரைவாக 5,000 ரன்கள், 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் இதுவரை 5,717 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பு இச்சாதனையை செய்த ஆல்-ரவுண்டர்கள்
- அப்துல் ரசாக் (பாக்) - 258 போட்டிகள்
- ஷாகித் அப்ரிடி (பாக்) - 273 போட்டிகள்
- ஜாக்ஸ் காலிஸ் (தெ.ஆப்) - 296 போட்டிகள்
- சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 304 போட்டிகள்
நேற்றை போட்டியில் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென் ஆப்பிரிக்க அணி 309 ரன்கள் மட்டுமே குவித்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.