இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 43ஆவது போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைக் குவித்தது.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் இருந்தே சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. எனினும் அந்த அணியின் பிரதான ஆல்-ரவுண்டரான ஷகிப்-அல்-ஹசன் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நேற்று 66 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஷகிப், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 606 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பை குரூப் பிரிவுகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் 586 ரன்கள் குவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, 7ஆவது முறையாக அரைசதத்தை எட்டியுள்ள ஷகிப், ஒரு தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் சமன் செய்துள்ளார். மேலும், ஒரு தொடரில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களின் பட்டியலில் சச்சின் (673 ரன்கள், 2003), ஹேடன் (659 ரன்கள், 2007) ஆகியோருக்கு அடுத்தபடியாக இருந்துவருகிறார்.
இது தவிர உலகக்கோப்பை தொடர்களில் 12 அரைசதம் விளாசிய வீரர் என்ற இலங்கையின் சங்கக்கராவின் சாதனையையும் ஷகிப் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 21 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும், ஒரு உலகக்கோப்பை தொடரில் 600க்கும் அதிகமான ரன்கள், 12 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் ஷகிப் படைத்துள்ளார்.