உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடிவருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் சார்ஃப்ராஸ் அகமது டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக்கும், பகர் சமானும் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 14ஆவது ஓவர் வரையில் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடிய பாகிஸ்தான் அணி இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து பறிகொடுத்தது. சமான், இமாம் உல் ஹக் இருவரும் 44 ரன்களை எடுத்து தாஹிர் சுழலில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய பாபர் அசாம், ஹரிஸ் சோஹைல் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை நல்ல இலக்கத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 38ஆவது ஓவரில் 200 ரன்களை கடந்தது. 80 பந்துகளில் 69 ரன்கள் அடித்த பாபர் அசாம் 41ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் சோஹைல் இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்ததால் 48ஆவது 300 ரன்களை கடந்தது பாகிஸ்தான்.
இறுதியாக 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் வீரர் ஹரிஸ் சோஹைல் 59 பந்துகளில் 89 ரன்கள் அடித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம். தென் அணியில் வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி 3 விக்கெட்டுகளும், தாஹிர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.