இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் ஒரு சில போட்டிகளில் தோனியின் ஆட்டம் விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக ஜூன் 30ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி-கேதர் ஜாதவ் கூட்டணி இறுதிக்கட்டத்தில் மந்தமாக ஆடியது கடும் விமர்சினம் செய்யப்பட்டது. மேலும் அந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் தோனி என பலரும் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணி வெற்றிப்பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தோனி குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தோனி பத்து வருடங்களில் மிகச்சிறந்த பினிஷ்ராக இருந்து வருகிறார். அவரின் இடத்தை எந்தவொரு வீரராலும் நிரப்ப முடியும் என்று தோன்றவில்லை.
தோனி தனது அனுபவத்தை மற்ற இந்திய அணி வீரர்களுக்கு கற்றுத்தர வேண்டும். தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட வேண்டும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தோனியின் கீழ் விளையாடிய இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. இந்திய அணி எந்தவொரு அணியையும் வீழ்த்தும் தரத்தில் தற்போது உள்ளது என்றும் லசித் மலிங்கா குறிப்பிட்டார்.
இன்று நடைபெறும் 44ஆவது போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.