இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், டிரினாட்டில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் இரண்டு ரன்களுக்கு ஷெல்டான் காட்ரலின் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
பின்னர், ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த கோலி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால், மறுமுனையில், நிதானமாக ஆடி வந்த ரோகித் ஷர்மா 18 ரன்களுக்கு அவுட் ஆனார்.
ரோகித்தைத் தொடர்ந்து, நான்காவது வரிசையில் களமிறங்கிய ரிஷப் பந்த் 20 ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினார்.
ஒருபுரம் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை விளையாட திணறினாலும், மறுமுனையில், கோலி சிறப்பாக பேட்டிங் செய்து இந்த ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என பாடம் எடுத்தார்.
ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியான டைமிங்கில் விளையாடிய அவர், 38ஆவது ஓவரில் தனது 42ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
கிட்டத்தட்ட 12 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அவர் சதம் விளாசி தன்மீது இருந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இறுதியில், 42 ஆவது ஓவரில் அவர் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில், 14 பவுண்ட்ரி, ஒரு சிக்சர் அடங்கும்.
கோலியின் ஆட்டத்தைக் கண்டு மேகங்களும் கண்ணீர் வடித்தது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர், சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 279 ரன்களை எடுத்தது.