நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை (World cup 2019) கிரிக்கெட் திருவிழாவானது நேற்றுடன் நிறைவுபெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் காணாத ஒரு ஆட்டமாக அமைந்தது.
காரணம் இப்போட்டியின் இறுதி பந்துவரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து சேஸிங் செய்த இங்கிலாந்து அணியின் விடாமுயற்சியால் கடைசி பந்தில் சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறையிலும் இரு அணிகளும் சமநிலை பெற்றன. எனினும் பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்தத் தோல்விக்கு பின் தனது ட்விட்டர் பக்கத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் குழந்தைகளுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், 'குழந்தைகளே! யாரும் விளையாட்டை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்காதீர்கள். பேக்கரி தொழில் அல்லது வேறு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். உடல் பருமனைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியான மனிதராக வாழ்ந்து 60 வயதில் இறந்துவிடுங்கள்' என பதிவிட்டுள்ளார்.