இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போட்டி என்பதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் - கேரி ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஸ்மித் அதிகபட்சமாக 85 ரன்களை குவித்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ், அடில் ரஷித் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து சேஸிங்கை தொடங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பெய்ர்ஸ்டோ ஆகியோர் அட்டகாசமான ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக ராய் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவரில் 124 ரன்கள் எடுத்திருந்தபோது, பெய்ர்ஸ்டோ 34 ரன்களில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ராய் 85 ரன்கள் ( 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோ ரூட் - கேப்டன் இயான் மார்கன் இருவரும் தங்கள் பங்கிற்கு அடித்து ஆடத் தொடங்கினர். இறுதியில் பெஹ்ரன்டார்ஃப் வீசிய பந்தை மிட்-ஆன் திசையில் பவுண்டரியாக மாற்றிய இங்கிலாந்து கேப்டன் மார்கன் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து 32.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி ஃபைனலுக்கு முன்னேறியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி வரும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.