இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ’ரன் மெஷின்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கும் போட்டிகளில் எல்லாம் ஏதெனும் சாதனையை நிகழ்த்துவதையே தனது வழக்கமாக கொண்டுள்ளார் கோலி.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மற்றொரு சாதனையை அவர் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 416 சர்வதேச இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள கோலி, 19 ஆயிரத்து 963 ரன்களை குவித்துள்ளார். எனவே, அவர் 20 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை அடைய இன்னும் 37 ரன்களே தேவையுள்ளது.
இன்றைய போட்டியில் அவர் 37 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரய்ன் லாரா ஆகியோரின் சாதனைகளை முறியடிப்பார். அவர்கள் இருவரும் 453 இன்னிங்ஸில் 20000 ரன்கள் குவித்திருக்கின்றனர். நடப்பு உலகக்கோப்பை தொடரில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.