உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து எதிர்பாராத நேரங்களில் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அணியான ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.
கங்காருக்களைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு பூனையாக வாங்கிய அடிகளுக்கு தற்போது புலியாக பாய்ந்து அடித்து வருகிறது. வார்னர், ஸ்மித் ஆகியோரின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு அசுர பலத்தைக் கொடுத்துள்ளது. டிஃபெண்டிங் சாம்பியன்ஸ் அணிகள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லி அடித்து வருகிறது ஆஸ்திரேலியா அணி.
வார்னரின் ரன் குவிக்கும் தாகம், ஸ்மித்தின் பழைய கணக்கு, மேக்ஸ்வெல்லின் புதிய முகம், ஸ்டார்க் ரிட்டர்ன்ஸ், ஸாம்பாவின் சுழல், கம்மின்ஸ் வேகம், ஸ்டோனிஸின் ஆல்-ரவுண்டர் ஆட்டம் என அதிரடியாக களமிறங்கி பலமான அணிகளை மிரட்டி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இவர்களுக்கு முன்னால் ஆஃப்கானிஸ்தான் அணி என்ன ஆக போகிறதோ என ஆஸ்திரேலிய ரசிகர்கள் தற்போதே கூறிவருகின்றனர்.
அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் சேஷாத், கேப்டன் அஃப்கான், ஷாகிடி ஆகியோரை நம்பியே பேட்டிங் வரிசை உள்ளது. குறைந்த ஆண்டுகளில் ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த வளர்ச்சிக்கு அந்த அணியின் பந்துவீச்சே முக்கிய காரணம். முகமது நபியின் எக்கனாமிக்கல் பந்துவீச்சு, ரஷீத் கானின் அட்டாக்கிங் பவுலிங், முஜீப் உர் ரஹ்மானின் கணிக்க முடியாத திருப்புமுனைகள் என பெரிய அணிகளையும் அப்செட் செய்வதற்கான தகுதிகளை அந்த அணி பெற்றுள்ளது.
கத்துக்குட்டி அணிகள் என்ன செய்ய முடியும் என கேட்பவர்களுக்கு பதில், கத்துக்குட்டி அணிகள்தான் உலகக்கோப்பை தொடர்களில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் கொடுத்துள்ளன. ஆஸ்திரேலிய அணியின் வலிமையான பந்துவீச்சை எதிர்கொள்ள மிகப்பெரிய திட்டங்களை ஆஃப்கானிஸ்தான் வகுக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி விக்கெட்டுகளை சீரான இடைவெளிகளில் வீழ்த்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு ஈடுகொடுத்து ஆட முடியும். இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணியின் வேகத்துக்கு லாரியின் டயருக்குள் சிக்கிய எலி கதை என்பது போல்தான் முடியும் ஆட்டத்தின் முடிவு.